MEDIA STATEMENTSELANGOR

போலீஸ் சோதனையில் எண்மர் கைது- வெ.54,000 மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

கோத்தா திங்கி, ஜூலை 28-  இங்குள்ள சுங்கை பாப்பான் வட்டாரத்தில்   கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெ.54,550.20   மதிப்புள்ள 779.07 கிராம் போதைப் பொருளைக் கைப்பற்றிய போலீசார்  ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்தனர்.

அதிகாலை 3.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த சிறப்புச் சோதனையில்
19 முதல் 51 வயதுக்குட்பட்ட அனைவரும் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்   கைது செய்யப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்  ஹூசேன் ஜமோரா தெரிவித்தார்.

கடந்த மே மாதம் முதல்  செயல்பட்டு வந்த இக்கும்பல்  ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டை போதைப் பொருளை பொட்டலமிடுவதற்கும்  உள்ளூர் சந்தையில் அதனை   விநியோகிப்பதற்கும் பயன்படுத்தி வந்ததாக அவர் தெரிவித்தார்.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில்  அறுவர் மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருளையும் ஒருவர் டி.எச்.சி. போதைப் பொருளையும் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது என்று இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைதானவர்களில்  ஐந்து சந்தேக நபர்கள் போதைப்பொருள் தொடர்பான கடந்தகால குற்றவியல் பதிவுகளைக் கொண்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது என அவர் கூறினார்.

சந்தேக நபர்களிடமிருந்து நாங்கள் 25,000 வெள்ளி  மதிப்புள்ள மூன்று வாகனங்களையும், 5,023 வெள்ளி  ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தோம் என்ளார் அவர்.

கைதான அனைவரும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ்  விசாரணைக்காக வரும் செவ்வாய் கிழமை வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.


Pengarang :