MEDIA STATEMENTSELANGOR

கம்போங் துங்கு தொகுதி நிலையிலான இலவச மருத்துவப் பரிசோதனையில் 200 பேர் பங்கேற்றனர்

பெட்டாலிங் ஜெயா, ஆக 3- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கம்போங் துங்கு தொகுதியில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவப் பரிசோதனையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கம்போங் துங்கு தொகுதியில் முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகம் கலந்து கொண்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.

இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கானது மட்டும் அல்ல. இளைஞர்கள் குறிப்பாக புற்று நோய் பாதிப்பு உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம் என அவர் தெரிவித்தார்.

இந்த சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இங்கு அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

பெட்டாலிங் ஜெயா, எஸ்எஸ்3, எம்.பி.பி.ஜே. மண்டபத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் நிகழ்வைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இதனிடையே, வரும் ஆகஸ்டு மாத இறுதியில் நடைபெறும் இலவச மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்க தமக்கு தேதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இங்கு இடம் காலியாக இருந்த காரணத்தால் முன்கூட்டியே இந்த பரிசோதனையில் கலந்து கொள்வதற்குரிய வாய்ப்பு தமக்கு வழங்கப்பட்டதாக வீட்டு பணிப்பெண்ணான ஜி.சாரா (வயது 54) கூறினார்.

இத்தகைய இலவச மருத்துவ இயக்கங்கள் அடிக்கடி நடைபெறாது. இந்த வாய்ப்பினை நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் நோய் முற்றிய பிறகே அது குறித்து தெரியவருவதால் நமது உடலாரோக்கியம் மீது நாம் எப்போதும் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

பொது மக்கள் தங்கள் உடலாரோக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் என மிமிஜலினா அப்துல் ரஹ்மான் (வயது 61) கூறினார்.

தமது வீட்டிற்கு அருகில் இந்த இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுவது தமக்கு மிகவும் வசதியாக அமைந்து விட்டதாக சியா சுவி கீட் (வயது 76) குறிப்பிட்டார்.


Pengarang :