MEDIA STATEMENTSELANGOR

பத்து தீகா தொகுதியில் வெள்ளப் பிரச்சினைக்கு 60 விழுக்காடு தீர்வு

ஷா ஆலம், ஆக 5- மாநில அரசின் ஓராண்டு கால நிர்வாகத்தில் பத்து தீகா தொகுதி மக்கள் எதிர்நோக்கி வந்த வெள்ளப் பிரச்சினைக்கு அறுபது விழுக்காடு தீர்வு காணப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி தாம் சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்ட போது இத்தொகுதியில் நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை தமது முதன்மை இலக்காகக் கொண்டிருந்ததாக தொகுதி உறுப்பினர் டேனியல் அல் ரஷிட் ஹருண் கூறினார்.

இத்தொகுதியில் ஏழு இடங்கள் வெள்ளப் பிரச்சினையை எதிர்நோக்கி வந்த நிலையில் அவற்றில் நான்கு இடங்களில் வெள்ள நீர்  சேகரிப்பு குளம், நீர் இறைப்பு பம்ப் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு அப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளப் பிரச்சினைதான் எனது முதன்மை இலக்காக இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு வெள்ளம் போன்ற பேரிடர் மீண்டும் நிகழும் சாத்தியம் குறித்து நான் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். பத்து தீகா தொகுதியில் பாடாங் ஜாவா, செக்சன் 24 போன்ற இடங்கள் மிகவும் தாழ்வாக உள்ளன.

இவ்விரு இடங்களிலும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதோடு மற்ற இடங்களில் திட்டங்கள் திட்டமிடல் நிலையில் உள்ளன. கம்போங் கெபுன் பூங்காவில் நீர் இறைப்பு பம்ப்கள்  அமைக்கப்பட்டுள்ள நிலையில் பாடாங் ஜாவாவில் நீர் சேகரிப்பு குளத்துடன் நீர் இறைப்பு பம்ப்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

கடந்தாண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் புதுமுகமாக பத்து தீகா தொகுதியில் களமிறங்கிய 38 வயதான டேனியல், முன்னாள் மகளிர், குடும்ப மற்றும் சமூக நலத்த் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரீனா ஹருண் மற்றும் மூடா கட்சி வேட்பாளர் ஷியடியா இஸாத்தி நுர் ரசாக் மைடின் ஆகியோரை 3,382 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.

இளைஞர்கள் மத்தியில் மின்-விளையாட்டைப் பிரபலப்படுத்தும் நோக்கில் அந்த விளையாட்டு தொடர்பான பயிற்சி மையத்தை தாம் தொகுதி அமைக்கவுள்ளதாக அவர் டேனியல் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :