MEDIA STATEMENTSELANGOR

மதிப்பீட்டு வரி உயர்வு- எம்.பி.பி.ஜே. ஏற்பாட்டிலான கருத்து கேட்கும் நிகழ்வு 15ஆம் தேதி நடைபெறும்

பெட்டாலிங் ஜெயா, ஆக 6- மதிப்பீட்டு வரி உயர்வுக்கு எதிராக பொது மக்கள் முன்வைத்துள்ள ஆட்சேபனைகளை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் சீராய்வு செய்யவுள்ளது.

கடந்த மே மாதம் வரை 25,000 ஆட்சேபனைகளை மாநகர் மன்றம் பெற்றுள்ளதாகவும் இவ்விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறியும் நிகழ்வு இம்மாதம் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெறும் என்றும் பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது ஜஹாரி சாமிங்கோன் கூறினார்.

இக்காலக்கட்டத்தில் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு தினமும் 1,000 பேரை நாங்கள் அழைப்போம். அந்த ஆட்சேபனைகளை ஆய்வு செய்தப் பின்னர் அதனை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்வோம் என அவர் குறிப்பிட்டார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை தொடர்பு படுத்தி பெரும்பாலோர் இந்த மதிப்பீடு வரி உயர்வை ஆட்சேபிக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் மட்டும் இந்த வரி உயர்வு ஏன் இப்போது அமல் செய்யப்படுகிறது என கேள்வியெழுப்பியுள்ளனர் என்றார் அவர்.

நாட்டின் 67வது தேசிய தினத்தை முன்னிட்டு பெட்டாலிங் ஜெயா நிலையிலான தேசியக் கொடியைப் பறக்கவிடும் நிகழ்வை நேற்று இங்கு தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நகரத் திட்டமிடலை ஆக்ககரமான முறையில் மேற்கொள்வதற்காக ஊராட்சி மன்ற நிலையில் புதிய மதிப்பீட்டு வரி அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே மாதம் 30ஆம் தேதி கூறியிருந்தார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஊராட்சி மன்றங்கள் 20 முதல் 40 ஆண்டுகளாக மதிப்பீட்டு வரியை மறு ஆய்வு செய்யவில்லை.

காஜாங் நகராண்மைக் கழகம் 39 ஆண்டுகளாக (1985) மதிப்பீட்டு வரியை உயர்த்தவில்லை. கோல லங்காட் நகராண்மைக் கழகம் 37 ஆண்டுகளாகவும் (1987), செலாயாங் நகராண்மைக் கழகம் 32 ஆண்டுகளாகவும் (1989) மதிப்பீட்டு வரியை மறுஆய்வு செய்யவில்லை.

சுபாங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மற்றும் பண்டார் சன்வே ஆகிய இடங்களுக்கான மதிப்பீட்டு வரியை கடந்த 1992ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கவில்லை. யுஎஸ்ஜே, பூச்சோங், ஸ்ரீ கெம்பாங்கான், மற்றும் செர்டாங் ஆகிய பகுதிகளில் கடந்த 1996 முதல் அதாவது 28 ஆண்டுகளாக வரி உயர்வை அமைல்படுத்தவில்லை.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 28 ஆண்டுகளாகவும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் 27 ஆண்டுகளாகவும் ஷா ஆலம் மாநகர் மன்றம் 18 ஆண்டுகளாகவும் வரியை உயர்த்தவில்லை. இருப்பினும், சொத்து உரிமையாளர்கள் இந்த புதிய மதிப்பீட்டு வரிக்கு தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.


Pengarang :