MEDIA STATEMENTSELANGOR

முன்னாள் பிரதமர் மொகிதீன் யாசின் நாளை குவா மூசாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

ஷா ஆலம், ஆக. 26- முன்னாள் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவின் அதிகாரம் குறித்து கேள்வியெழுப்பும் வகையில் கருத்தினை வெளியிட்டது தொடர்பில் பெரிக்கத்தான் நேஷனல்  கூட்டணித் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு எதிராக நாளை குவா மூசாங் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

அண்மையில் நடைபெற்ற நெங்கிரி தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது வெளியிட்ட கருத்து தொடர்பில் மொகிதீனுக்கு எதிராக குற்றஞ்சாட்ட்டப்படும் என்று கிளந்தான் மாநில பெர்சத்து கட்சித் தலைவர் டத்தே கமாருடின் முகமது நோர் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற நெங்கிரி இடைத் தேர்தல் பிரசாரம் தொடர்பில் டான்ஸ்ரீ மொகிதீன் மீது நாளை குவா மூசாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்ற அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் இணைய ஊடகம் செய்தி  வெளியிட்டுள்ளது.

அந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது, கடந்த 2022 நவம்பர்  மாதம் நடைபெற்ற நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தாம் பிரதமராக ஆகும் அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை சத்திய பிரமாண வாக்குமூலத்தின் (எஸ்.டி.) மூலம் பெற்றிருந்ததாக மொகிதீன் கூறியிருந்தார்.

பிரதமரை நியமிக்கும் விஷயத்தில் அப்போது மாமன்னராக இருந்த அல்-சுல்தான் அப்துல்லாவின் அதிகாரம் குறித்தும் இந்த பிரசாரக் கூட்டத்தின் போது அவர் கேள்வியெழுப்பிருந்தார்.

மொகிதீனின் இந்த கருத்து குறித்து  இம்மாதம் 19ஆம் தேதி கடும் கண்டனம் தெரிவித்த பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹஸ்சனால் இப்ராஹிம், இதன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையைக் கேட்டுக் கொண்டார்


Pengarang :