NATIONAL

எஸ்பிஆர்: சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தல் ஆகஸ்ட் 29-இல் நடைபெறும்

புத்ராஜெயா, ஜூலை 22:

தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட், 29-ஆம் தேதி நடைபெறும் என்று மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்), இன்று அறிவித்திருக்கிறது. மேலும் , ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதற்கான வேட்புமனு தாக்கலும், ஆகஸ்ட் 25-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பும் நடைபெறவிருப்பதாக எஸ்பிஆர் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம் தெரிவித்திருக்கிறார்.

இந்த இடைத்தேர்தல் பொறுப்பேற்கும் அதிகாரியாக முவாலிம் மாவட்ட அதிகாரி ஷம்சூல் ரிட்ஸ்வான் இட்ரீஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரோடு  உதவியாக நான்கு துணை நிர்வகிப்பு அதிகாரிகளும் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். பிரச்சார காலக்கட்டத்தின்போது, தேர்தல் பிரச்சார நடவடிக்கை அனைத்தையும் கண்காணிக்க இரண்டு தேர்தல் பிரச்சார அமலாக்கக் குழுவை உருவாக்க எஸ்.பி.ஆர். ஒப்புக் கொண்டிருக்கிறது. ஶ்ரீ தஞ்சோங் மண்டபம், தங்சோங் மாலிம் நகராண்மைக் கழகம் ஆகியவற்றை வேட்புமனு தாக்கல் மையமாகவும் வாக்குகளை சேகரிக்கும் அதிகாரப்பூர்வ மையமாகவும் எஸ்.பி.ஆர் பயன்படுத்தவிருக்கிறது.

வியாழக்கிழமை, புத்ராஜெயாவில், எஸ்பிஆர் தலைமையகத்தில் சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான சிறப்புக் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். பேரா, சிலிம் ரீவர் சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சோம் மாலிம் அம்னோ தொகுதித் தலைவருமான, 59 வயதுடைய டத்தோ முகமட் கூசாய்ரி அப்துல் தாலிப், கடந்த ஜூலை 15ஆம் தேதி மூச்சுத் திணரல் காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.


Pengarang :