ECONOMYNATIONALSELANGOR

இந்தியா ஏற்றுமதிக்கு தடை விதித்த போதிலும் நாட்டில் வெங்காய கையிருப்பு போதுமான அளவு உள்ளது

புத்ரா ஜெயா, அக் 29- வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ள போதிலும் நாட்டில் அந்த உணவுப் பொருளின் கையிருப்பு போதுமான அளவு உள்ளதாக உள் நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

இந்தியாவின் அந்த தடையை தொடர்ந்து தேவையை ஈடுபடும் வகையில் நாட்டிலுள்ள 
121 இறக்குமதியாளர்கள் பாகிஸ்தான், சீனா, தாய்லாந்து, ஹாலந்து ஆகிய 
நாடுகளிலிருந்து வெங்காய இறக்குமதியை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான காலகட்டத்தில் மலேசியா 34 கோடியே 20 லட்சம் கிலோ வெங்காயத்தை இறக்குமதி செய்ததாக அவர் மேலும் சொன்னார்.

மொத்தம் 24 நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றில் 
அதிக பட்சமாக இந்தியாவிலிருந்து 38 விழுக்காட்டு வெங்காயம் இறக்குமதி செய்யப் 
படுகிறது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான்(23%), ஹாலந்து(8%), தாய்லாந்து(8%), சீனா (16%), இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.

நாட்டில் கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயத்தில் 12 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரம் கிலோ இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.

இந்தியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வெளிநாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா கடந்த மாதம் 14 ஆம் தேதி தடை செய்தது.


Pengarang :