PBTSELANGOR

டிங்கி தொடர்புடைய இறப்பு சம்பவங்கள் குறைந்தன

ஷா ஆலம், நவ 3- இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரையிலான 44வது நோய்த் தொற்று வாரத்தில்  சிலாங்கூரில் 41,179 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 60,993ஆக இருந்தது.

அந்த உயிர்க்கொல்லி நோய் 32.5 விழுக்காடு குறைந்துள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுவதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி ஙடிமான் கூறினார்.

அதே சமயம், மரண எண்ணிக்கை 28 விழுக்காடு குறைந்து 36ஆக பதிவு செய்யப்பட்டது. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் 50 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன என்றார் அவர்.

டிங்கி காய்ச்சல் ஏற்படுவதற்கு  காரணமாக விளங்கும் ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதற்கு ஏதுவாக வீட்டின் சுற்றுப்புறங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நீர் தேங்கியுள்ள இடங்களைச் சுத்தம் செய்வது, கொசு மருந்து தெளிப்பது போன்ற நடவடிக்கைளுக்கு வாரம் 10 நிமிடங்களைச் செலவிடுவதன் மூலம் டிங்கி பரவலைத் தடுக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Pengarang :