PBTSELANGOR

டிங்கி-காசநோயை கண்டறியவும் செலங்கா செயலியைப் பயன்படுத்த திட்டம்

ஷா ஆலம், நவ 4- செலங்கா செயலியை டிங்கி மற்றும் காச நோய் கண்டவர்களை அடையாளம் காண்பதற்கும் பயன்படுத்துவது குறித்து சிலாங்கூர் அரசு பரிசீலித்து வருகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களை கண்டுபிடிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செலங்கா செயலியை இதர நோய்களை கண்டறிவதற்கும் ஏதுவாக மேம்படுத்தப்படுத்துவதன் மூலம் மாநில சுகாதார துறைக்கு உதவ முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

டிங்கி காய்ச்சல் மற்றும் காச நோய் ஆகியவை சிலாங்கூர் மாநிலத்தில் அச்சமூட்டும் நோய்களாக உள்ளன. அந்நோய்களை சமாளிப்பதற்கு இந்த செயலியைப் பயன்படுத்துவது குறித்து நாம் பரிசீலிக்கலாம் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கண்டறிவதில் இந்த செயலி பெரிதும் துணை புரிந்துள்ளது. இதற்குப் பின்னர் இதன் பயன்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்வது குறித்து ஆராயலாம் என்று மாநில சட்டமன்றத்தில் கோத்தா அங்கிரிக் உறுப்பினர் முகமது நஜ்வான்  ஹலிமி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் தெரிவித்தார்.

பயனீட்டாளர்கள் சென்ற இடங்கள் குறித்த தகவல்கள் மற்றும் வரைபடங்களை உள்ளடக்கிய அந்த செலங்கா செயலியை மாநில அரசு கடந்த மே மாதம் 4ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.


Pengarang :