EKSKLUSIFSELANGOR

கிள்ளான், மேருவில் மருத்துவமனை நிர்மாணிப்புக்கு 50 ஏக்கர் நிலம்-       மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், நவ 4- புதிய மருத்துவமனையை நிர்மாணிப்பதற்காக சிலாங்கூர்மாநில அரசு கிள்ளான், மேரு நகரில் 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கிள்ளானில் உள்ள துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் கடுமையான இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையும் சுங்கை பூலோ மருத்துவமனை கோவிட்-19 நோயாளிகளுக்கான பிரத்தியேக மருத்துவமனையாக மாற்றுப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைய கருத்தில் கொண்டு புதிய மருத்துவமனையை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.

மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிலத்தில் புதிய மருத்துவமனையைக் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டை  மத்திய அரசாங்கம் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கும் எனத் தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர்த்து, வான் போக்குவரத்து மற்றும் இணையச் சேவையை விரிவுபடுத்துவது ஆகிய அம்சங்கள் மீதும் மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத்தும் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மந்திரி புசார் சொன்னார்.

எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் வான் போக்குவரத்து துறை மீது  ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் அதிகம் முக்கியத்துவம் தருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்பு பயணச் சேவையில் ஈடுபட்ட விமானங்களின் எண்ணிக்கை 25,000ஆக இருந்தது. எனினும் நடப்புச் சூழலில் அந்த எண்ணிக்கை 8,000 முதல் 10,000 ஆக குறைந்து விட்டது. எனினும் நோய்த் தொற்று குறைந்தவுடன் இத்துறை மீண்டும் உத்வேகம் பெறும். அதற்கு இப்போதே நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் 60 முதல் 70 விழுக்காடாக இருக்கும் இணையைச் சேவையின் அடைவு நிலையை விரிவுபடுத்துவது மற்றொரு முக்கிய அம்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரும் 2022ஆம் ஆண்டிற்குள் இணையச் சேவையை சிலாங்கூர் மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்த டெலிகோம் மலேசியா நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும் அவர்  கூறினார்.

 

 

 


Pengarang :