ECONOMYPBTSELANGOR

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மறுஆய்வு செய்யப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், நவ 4- பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அவசர உதவித் தொகையை மறு ஆய்வு செய்ய மாநில அரசு தயாராக உள்ளது. 

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு இணையானதாக இருப்பது உறுதி செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம் மீது தமது துறையின் கீழ் செயல்படும் பேரிடர் நிர்வாக குழு உரிய கவனம் செலுத்தி தேவையான மாற்றங்களைச் செய்யும் என அவர் தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட பெர்மாத்தாங், பெல்டா சுகார்த்தோ மற்றும் உலு பெர்ணம் பகுதிகளுக்கு நான் வருகை மேற்கொண்டேன். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 500 வெள்ளி உதவித் தொகை அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இணையானதாக இல்லை என்பதை கண்டறிந்தேன் என்றார் அவர்,

வெள்ளத்தின் போது வீடுகளில் உள்ள அனைத்துப் பொருள்களும் சேதமடைந்து விடுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் மதிப்பு  சீரமைக்கப்படவும் மறு ஆய்வு செய்யப்படவும் வேண்டியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பேரிடர் கால உதவித் தொகையை மறு ஆய்வு செய்வது தொடர்பில் செமென்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி  முன்வைத்த பரிந்துரை தொடர்பில் கருத்துரைத்த போது மந்திரி புசார் இதனைக் கூறினார்.


Pengarang :