ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் பத்து மாதங்களில் 27,234 பேர் வேலை இழப்பு- பெர்கேசோ தகவல்

ஷா ஆலம், நவ 21- இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை சிலாங்கூரில் 27,234 பேர் வேலை இழந்துள்ளதாக பெர்கேசோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது.

சி.ஐ.பி. எனப்படும் தொழிலாளர் காப்புறுதி முறை தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கிடைக்கப்பெற்றதாக சிலாங்கூர் மாநில பெர்கேசோ இயக்குநர் முஸ்தாபா டிராமான் கூறினார்.

வேலை இழந்தவர்கள் மறுபடியும் வேலை பெறுவதற்கும் தற்காலிக அடிப்படையில் ரொக்க உதவி பெறுவதற்கும் இந்த சி.ஐ.பி. முறை உதவுகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மிக அதிகமாக அதாவது 18,579 விண்ணப்பங்களை சி.ஐ.பி. பெற்றது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகியவையே இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாகும் என்று முஸ்தாபா தெரிவித்தார்.

எனினும், கடந்த ஜூலை மாதம் தொடங்கி கடந்த மாதம் வரை  இந்த எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதலாளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவது உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக உதவி கோரி சி.ஐ.பி. யிடம் விண்ணப்பம் செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கு சிலாங்கூர் மாநில அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடப்பிலுள்ள வேலைகளை தக்க வைத்துக் கொள்வதற்கும் ஏதுவாக  இலக்கவியல் துறைக்கு 10 கோடியே 70 லட்சம் வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :