ECONOMYSELANGOR

இலக்கவியல் முன்னோடித் திட்டம்- சிலாங்கூர் அரசு கிராமங்களை அடையாளம் கண்டது

ஷா ஆலம், நவ 23- இலக்கவியல் முன்னோடித் திட்டத்தை பரீட்சார்த்த முறையில் அமல் படுத்துவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசு  புற நகர்ப்பகுதிகளில் உள்ள சில கிராமங்களை அடையாளம் கண்டுள்ளது.

தொலைத் தொடர்பு சமிக்ஞைகள் குறைவாக கிடைக்கும் பகுதிகள் இந்நோக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டதாக புற நகர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.

தேர்வு செய்யப்பட்ட  கிராமங்கள் பட்டியலிடப்பட்டு தொலைத் தொடர்பு ஒருங்கமைப்பை விரிவு படுத்துவதற்குரிய மையங்களாக உருவாக்கப்படும் என்றார் அவர்.

இந்த முன்னோடித் திட்டம் எந்த இடையூறும் இன்றி அமல்படுத்தப்பட்டு புற நகர்ப்பகுதி மக்களுக்கு சிறந்த பலனைத் தரும் என நம்புகிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.

பல பகுதிகளில் தொலைத் தொடர்பு சமிக்ஞைகள் சரிவர கிடைக்காதது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தாம் பல புகார்களைப் பெற்றுள்ளதாக தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 சம்பவங்களைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் தங்களின் அன்றாடப் பணிகளை இணையம் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும், கிராமங்களில் வசிப்போர் இணைய சேவையை பெற முடியாத காரணத்தால் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்றார் அவர்.


Pengarang :