ECONOMYNATIONALPress Statements

இறைச்சி இறக்குமதியில் மோசடி- சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  சட்டத்தின் முன் நிறுத்துவீர்- டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், டிச 26– அங்கீகரிக்கப்படாத நாடுகளிலிருந்து தரமற்ற மற்றும் ஹலால் உத்தரவாதம் இல்லாத இறைச்சியை இறக்குமதி செய்யும் மோசடி நடவடிக்கைக்கு துணை போன அரசாங்க அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் விரிவான மற்றும் வெளிப்படையான முறையில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சட்டவிரோதமான முறையில் இறைச்சி இறக்குமதி செய்யும் கும்பலுக்கு அரசு நிறுவன பணியாளர்களும் துணை போனதாக வெளி வந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது நெறியற்றச் செயலாகும் என்றார் அவர்.

ஊழலையும் வீண் விரயத்தையும் தடுப்பதற்கு நமது சக்தி அனைத்தையும் செலவிட்ட போதிலும் அரசாங்க அதிகாரிகள் நாட்டிற்கும் மக்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்து எளிதில் விலைபோய் விடுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்லாமிய நெறிகளையும் மாண்பையும் உயர்த்தும் பணியை மேற்கொள்ளும் பொறுப்பில் அமர்த்தப்பட்ட அமைப்பின் நற்பெயருக்கு இந்த ஊழல் சம்பவம் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அந்த அமைப்பிற்கு பெரும் தொகை மானியமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இருந்த போதிலும் இது போன்ற பொறுப்பற்றச் செயல்களால் அந்த அமைப்பு மக்களின் நன்மதிப்பை இழந்து விட்டது என்றார் அவர்.

 


Pengarang :