ACTIVITIES AND ADSECONOMYNATIONALSAINS & INOVASISELANGOR

கோவிட்-19 பெருந்தொற்றைத் தடுக்க 50  லட்சம் தடுப்பூசிகளை வாங்க சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், ஜன 16- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க 30 லட்சம் முதல் 50 லட்சம் தடுப்பூசிகளை வாங்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.

சிலாங்கூரில் அதிக தொழிற்சாலைகள் உள்ள காரணத்தால் மாநில மக்கள் மட்டுமின்றி அந்நியத் தொழிலாளர்களின் தேவையையும் ஈடுசெய்யும் நோக்கில்  இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கூட்டரசு அரசாங்க அளவில் தடுப்பூசிகள் வாங்கப்பட்டு விட்டதாக அறிகிறோம். உள்ளூர் மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு மேலும் அதிகமான தடுப்பூசிகளை நாம் வாங்குவதற்குரிய சாத்தியம் உள்ளது என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி கொள்முதல் தொடர்பான நடவடிக்கைகள் கடந்த வாரம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை முற்றுப்பெற்றவுடன் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

மக்கள் மற்றும் தொழில்துறை நலன் சார்ந்த விவகாரமாக இது உள்ளதால் வருடாந்திர தேவை மற்றும் இதற்கு தேவைப்படும் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது என அவர் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு இலவச கோவிட்-19 சோதனையை மேற்கொள்ளும் ஒரே மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. சிவப்பு மண்டலங்களை மையமாக கொண்ட இந்த இலவச சோதனை இயக்கம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் மேற்கொள்ளப்படுகிறது.

 


Pengarang :