PBTSELANGOR

கிள்ளானில் காலைச் சந்தை இன்று மீண்டும் திறக்கப்பட்டது

கிள்ளான், பிப் 1– கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக கிள்ளானில் ஒத்தி வைக்கப்பட்ட காலைச் சந்தைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

கிள்ளான் நகராண்மைக் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் அந்த சந்தைகள் அதிகாலை 6.00 மணி முதல் காலை 11.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக அக்கழகத்தின் வர்த்தக தொடர்புப் பிரிவு இயக்குநர் நோர்ஃபிஸா மாஃபிஷ் கூறினார்.

எங் ஆன், லோரோங் சுங்கை பூலோ 13, கிள்ளான் உத்தாமா, லோரோங் சிப்பாட், தெலுக் புலாய், புக்கிட் திங்கி ஆகிய பகுதிகளில் உள்ள காலைச் சந்தைகள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாக அவர் சொன்னார்.

தாமான் சீ லியோங், ஜாலான் பாப்பான், பங்சாபுரி தாமான் சீ லியோங் ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று சந்தைகள் வரும் புதன்கிழமை தொடங்கி செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக வர்த்தகர்கள் தங்கள் அங்காடிக் கடைகளின் இடது மற்றும் வலது புறங்களை நெகிழிப் பைகளை  கொண்டு மறைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களின் உடல் உஷ்ணத்தை கண்டறிவதற்காக தெர்மாமீட்டரை வைத்திருப்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. சுய கட்டுப்பாட்டை வர்த்தகர்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :