ECONOMYSELANGOR

உணவு உதவித் திட்டத்திற்கு வெ.50,000 மானியம்- சிலாங்கூர் அரசுக்கு காப்பார் எம்.பி. நன்றி

ஷா ஆலம், பிப் 2– காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு சிலாங்கூர் அரசு வழங்கிய ஐம்பதாயிரம் வெள்ளி மானியம் தொகுதியில் உணவு வங்கித் திட்டத்தை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமிட் கூறினார்.

இத்தொகுதியை உள்ளடக்கிய செலாட் கிள்ளான், செமன்தா மற்றும் மேரு சட்டமன்றத் தொகுதிகளில் வசிக்கும் வசதி குறைந்தவர்களுக்கு இத்திட்டத்தின் வாயிலாக உதவிகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வசதி குறைந்தோருக்கு உதவும் வகையில் இந்த மானியத்தை வழங்கிய சிலாங்கூர் அரசாங்கத்திற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கும் இந்த உணவு வங்கித் திட்டத்தின் வாயிலாக உதவிகள் வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

வசதி குறைந்தவர்கள் குறிப்பாக பி40 பிரிவினருக்கு உதவும் நோக்கிலான திட்டங்களுக்கு வரவேற்பும் மக்களின் ஆதரவும் எப்போதும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 7.38 கோடி வெள்ளி மதிப்பிலான கித்தா சிலாங்கூர் உதவித் திட்டத்தை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 20ஆம் தேதி அறிவித்தார்.

உணவு வங்கித் திட்டத்தை அனைத்து தொகுதிகளிலும் மேற்கொள்வதற்கு ஏதுவாக மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தலா ஒரு லட்சம் வெள்ளியும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தலா ஐம்பதாயிரம் வெள்ளியும் கித்தா சிலாங்கூர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :