ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

லெம்பா சுபாங் 1 பி.பி.ஆர்.  நிர்வாகத்தை சிலாங்கூர் அரசு எடுத்துக் கொள்ளத் தயார்- ரோசியா இஸ்மாயில் தகவல்

பெட்டாலிங் ஜெயா, பிப் 3– திறனற்ற நிர்வாகம் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதை கருத்தில் கொண்டு லெம்பா சுபாங் 1, பி.பி.ஆர். மக்கள் குடியிருப்பு பகுதியின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது.

அந்த குடியிருப்புப் பகுதியின் நிர்வாகம் சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியத்தின் கீழ் கொண்டு வருவதற்கு முன்னர் பல்வேறு நிபந்தனைகள் மீது இரு தரப்பும் இணக்கம் காண வேண்டியுள்ளதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

நிர்வாக உரிமையை விட்டுக் கொடுப்பது தொடர்பான மகஜரில் கட்டணத் தீர்வு, வீடுகளை பழுதுபார்ப்பது மற்றும் பராமரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

இரு தரப்பின் நலனையும் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். பிற்காலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக குத்தகையை ரத்து செய்யும் நடவடிக்கையை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

லெம்பா சுபாங் பி.பி.ஆர். குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை நேரில் கண்டறிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

திடக்கழிவுகளை அகற்றும் பணியை குத்தகையாளர் முறையாக மேற்கொள்ளாத காரணத்தால் குப்பைக் கூளங்கள் மற்றும் துர்நாற்றத்தால் கடந்த ஐந்தாண்டுகளாக தாங்கள் அவதியுற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

 


Pengarang :