ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்களுக்கு உதவ எங்களுக்கும் மானியம் தருவீர்- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வேண்டுகோள்

ஷா ஆலம், பிப் 6- கோவிட்-19 பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஏதுவாக கட்சி பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மானியம் வழங்குமாறு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் வேறுபாடின்றி எதிர்க்கட்சிகளுக்கும் மானியம் வழங்கும் ஜோகூர் மற்றும் பேரா ஆகிய மாநிலங்களை டான்ஸ்ரீ மொகிடின் யாசின் அரசாங்கம் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று  32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை ஒன்றின் வழி இக்கோரிக்கையை விடுத்தனர்.

பக்கத்தான் ஹராப்பான் வசமுள்ள பினாங்கு மற்றும் சிலாங்கூரில் இந்த நடைமுறையைை நீண்ட நாட்களாக அமல்படுத்தி வருவதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட தங்கள் தொகுதியை சேர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு இந்த மானியம் பெரிதும் துணை புரியும் என்று அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

ஜனநாயக அடிப்படையில் எடுத்துள்ள முடிவுக்காக வாக்காளர்களையும் மக்களையும் தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமான செயல் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

கோவிட்-19 பெருந் தொற்றின் மூன்றாம் அலை மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆகிய பிரச்சினைகளை நாடு எதிர்நோக்கியுள்ள நிலையில் அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததை மொகிடின் மறந்து விடக்கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 

இந்த கூட்டறிக்கையில் எம். குலசேகரன், கஸ்தூரிராணி பட்டு, பி. பிரபாகரன், ஆர். சிவராசா, திரேசா கோக், காலிட் சமாட், சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், ஹன்னா இயோ உள்ளிட்ட 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.


Pengarang :