ALAM SEKITAR & CUACAPBTSELANGOR

சட்டவிரோதமாக குப்பை கொட்டுவோர் குறித்து தகவல் தந்தால் வெகுமதி

செலாயாங், பிப் 11– தனது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டுவோர் குறித்த தகவல் தருவோருக்கு 350 வெள்ளி வெகுமதி வழங்க செலாயாங் நகராண்மைக் கழகம் முன்வந்துள்ளது.

இத்தகைய பொறுப்பற்றச் செயல்களை துடைத்தொழிப்பதில் அமலாக்க அதிகாரிகளுக்கு பொதுமக்களும் உதவுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த வெகுமதி திட்டம் அறிவிக்கப்படுவதாக செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் ஷம்சுல் ஷாரில் பட்லிசா கூறினார்.

பொது மக்கள் ஊராட்சி மன்றங்களின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் சட்டவிரோத குப்பை கொட்டும் நடவடிக்கைள் குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி வழங்கவிருக்கிறோம் என்றார் அவர்.

எனினும், பொதுமக்கள் கொடுக்கும் தகவல்கள் குற்றவாளிகள் பிடிபடும் அளவுக்கு முழுமையானதாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

சட்டவிரோத குப்பை கொட்டும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அறிந்தவர்கள் 03-61266009 அல்லது 03-61266038 என்ற  எண்களில் அமலாக்கத் துறையை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

கடந்தாண்டில் 22 சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்களை அமலாக்க அதிகாரிகள் கண்டு பிடித்த வேளையில் 57 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டன.


Pengarang :