ECONOMYNATIONALSELANGOR

மாநில வளர்ச்சியின் பலனை அனுபவிப்பதில் எத்தரப்பினரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்- மந்திரி புசார் உத்தரவாதம்

ஷா ஆலம், பிப் 11- மாநிலத்தின் வளர்ச்சியின் பலனாக கிடைக்க க்கூடிய அனுகூலங்களை அனுபவிப்பதில் எந்த தரப்பினரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவாதம் அளித்தார்.

அரசாங்கத்தின் ‘இணைந்து செயல்படுவோம்‘ சுலோகத்திற்கேற்ப அனைத்து மக்களின் நலன் மீதும் குறிப்பாக இலக்கவியல் சார்ந்த வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

விவேக மாநிலம் என்ற இலக்கை அடைவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் சிலாங்கூர் ராக்கான் டிஜிட்டல் போன்ற திட்டங்களின் வாயிலாக கணினி ஆற்றல் பெற்றிராத முதியவர்களையும் கவனத்தில் கொண்டு திட்டங்களை வரைந்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

நமது இலக்கவியல் நீரோட்டத்தில் தாய், தந்தையர் மட்டுமின்றி தாத்தா, பாட்டிகளும் இணைந்து பயணிக்க வேண்டும்  என்பதே நமது இலக்காகும் என்று சீனப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச்  செய்தியில் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு சீனப்புத்தாண்டு புதிய சூழலில் கொண்டாடப்பட்டாலும் குடும்ப உறவுகள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் கன்பூசியஸின்   தத்துவம் தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இவ்வாண்டு சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பு இயங்கலை வாயிலாக நடத்தப்படுகிறது. இலக்கவியல் மாறும் திட்டத்தை நாம் 2016ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டாலும் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய சவால்கள் அத்திட்டத்தை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தி விட்டது என்றார் அவர்.


Pengarang :