ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

கிள்ளான் ஆற்று நீர் கலங்கிய நிலையில் காணப்படுவதற்கு நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளே காரணம்

கோலாலம்பூர், பிப் 18– கிள்ளான் ஆற்று நீர் தலைநகர் வட்டாரப் பகுதிகளில் கலங்கிய நிலையில் காணப்படுவதற்கு கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை (இ.கே.வி.இ.) கட்டுமானப் பணிகளே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுப்பாடற்ற நிலச் சீராக்கப் பணிகள் காரணமாக கலங்கிய நீர் அம்பாங் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து அம்பாங் ஆறு வழியாக கிள்ளான் ஆற்றில் கலப்பது கடந்த 16ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டதாக கூட்டரசு பிரதேச வடிகால், நீர் பாசனத் துறையின் துணை இயக்குநர் பொறியாளர் எஸ். ரத்ன ராஜா கூறினார்.

ஆற்றில் சகதி நீர் கலந்ததற்கு அம்பாங் வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குத்தகையாளர் மண் அரிப்பையும் ஆற்றில் சகதி கலப்பதையும் தடுப்பதற்கான திட்டமிடலை கொண்டிராத காரணத்தால் ஆற்று  நீரில் சேறு கலந்து கலங்கிய நிலையில் காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் நிலச் சீராக்கப் பணிகளும் மலைச்சரிவுகளை சமன்படுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பில் உரிய அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக தமது துறை சுற்றுச்சூழல் துறை மற்றும் ஊராட்சி மன்றத்தின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டுச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :