PBTSELANGOR

ஸ்ரீ மூடா நவீன மார்க்கெட் வியாபாரிகளுக்கு லைசென்ஸ் கட்டண விலக்களிப்பு

ஷா ஆலம், மார்ச் 15– இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா நவீன மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக லைசென்ஸ் கட்டண விலக்களிப்பு வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மாநில அரசின் நோக்கத்திற்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

ஷா ஆலம் மாநகர் மன்றம் இங்குள்ள வணிகர்களுக்கு 150 வெள்ளி முதல் 200 வெள்ளி வரையிலான சைசென்ஸ  கட்டண விலக்களிப்பை ஓராண்டு காலத்திற்கு வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடுமையான வருமான இழப்பை எதிர்நோக்கியுள்ள வணிகர்களின் நிலையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது என்றார் அவர்.

நேற்று  தாமான் ஸ்ரீ மூடா நவீன மார்க்கெட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுமார் 2 கோடியே 80 லட்சம் வெள்ளி செலவிலான இந்த மார்க்கெட் நான்கு ஆண்டு கால நிர்மாணிப்புக்குப் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் முழுமையடைந்ததாக ஷா ஆலம்  டத்தோ பண்டார் டத்தோ ஹரிஸ் காசிம் கூறினார்.

சாய்வு நிலையிலான இந்த மார்க்கெட்டின் அமைப்பு முறை வாடிக்கையாளர்கள் படிகளைப் பயன்படுத்தாமல் மேல் மாடிக்குச் செல்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த மார்க்கெட்டில் 60  ஹலால் உணவு பொருள்களை விற்கும் கடைகள் நான்கு ஹலால் அல்லாத உணவு பொருள் கடைகள்,  56 உலர்ந்த உணவுப் கடைகள், 79 உணவு மற்றும் பான விற்பனைக் கடைகள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :