ECONOMYNATIONALSELANGOR

நிதி நிர்வாக வழிகாட்டி புத்தகம் இளைஞர்களுக்கு விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 19- இளைஞர்கள் நிதியை முறையாக நிர்வகிப்பதற்கு வழிகாட்டும் நிதி  நிர்வாக வழிகாட்டி புத்தகத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டிப் புத்தகம் மாநில சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

மாநிலத்திலுள்ள பெரும்பாலான இளைஞர்கள் நல்ல வருமானத்தை ஈட்டுகின்றனர். அந்த வருமானத்தை தவறான வழிகளில் செலவிட்டு திவாலாவது உள்ளிட்ட பிரச்னைகளில் அவர்கள் சிக்குவதை தடுப்பதற்காக இந்த நிதி நிர்வாக வழிகாட்டி புத்தகத்தை அரசு வெளியிடுகிறது என்றார் அவர்.

தேவையின் அடிப்படையில் செலவுகளை செய்வதற்கான வழிகாட்டுதலை இந்த புத்தகம் வழங்கும். இதன் மூலம் நிதியை முறையாக நிர்வகிப்பதன் அவசியத்தை பொதுமக்கள் உணர முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இந்த வழிகாட்டி புத்தகத்தை வெளியீடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் சுமார் பத்தாயிரம் புத்தகங்களை விநியோகிக்க தாங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இப்புத்தகத்தின் மூலம் அளப்பரிய பயனை பொதுமக்கள் பெறுவர் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக புத்தகத்தை அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டதால்  தொடக்கமாக பத்தாயிரம் புத்தகங்களை மட்டும் வெளியிட்டுள்ளோம். அடுத்தக் கட்டமாக மாநிலம் முழுமைக்கும் இப்புத்தகத்தை விநியோகிக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளோம் என்றார் அவர்.


Pengarang :