ECONOMYSELANGOR

பிப்ரவரி முதல் இலவச கோவிட்-19 பரிசோதனையில் 7,000 பேர் பங்கேற்பு

ஷா ஆலம் மார்ச் 20– இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நேற்று வரை சிலாங்கூர் மாநிலம் முழுவதும் சுமார் 7,000 பேர் இலவச கோவிட்-19 பரிசோதனையில் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொண்டவர்களில் 32 பராமரிப்பு மையங்களைச் சேர்ந்த 894 மூத்த குடிமக்களும் அடங்குவர் என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையக இத்தகைய பரிசோதனை இயக்கங்களில் தொடர்ந்து கலந்து தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் தடுப்பூசி இயக்கம் தொடங்கிவிட்டதால் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வது அவசியமற்றது என பொதுமக்கள் கருதக்கூடும். எனினும், அந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் இத்தகைய சோதனையை மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.

இன்று, தெலுக் பங்ளிமா காராங் சமூக மண்டபத்தில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைத் கட்டுப்படுத்துவதற்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் சுமார் 60 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் இந்த இலவச கோவிட்-19 சோதனை இயக்கத்தை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

 


Pengarang :