NATIONALSELANGOR

தலைவர்களைக் கொல்லும் முயற்சி முறியடிப்பு- – காவல் துறைக்கு பக்கத்தான் பாராட்டு

ஷா ஆலம், மார்ச் 26– அரசாங்கத் தலைவர்களை படுகொலை செய்தவதற்கு கடந்த  2020 ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை வெற்றிகரமாக தடுத்தி நிறுத்திய  காவல் துறைக்கு பக்கத்தான் ஹராப்பான் (நம்பிக்கை கூட்டணி) தலைவர் மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

அப்போது பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமது, அமைச்சர்களான லிம் குவான் எங், டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசுப் மற்றும் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ தோமி தோமஸ் ஆகியோரை படுகொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டத் தகவல் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக அம்மன்றம் கூறியது.

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த டான்ஸ்ரீ மொகிடின் யாசினிடம் இந்த கொலை முயற்சி தொடர்பான தகவலை போலீசார் தெரிவித்தனரா என்று அந்த அறிக்கையில் விளக்கப்படவில்லை.

எனினும், அச்சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து தற்போது பிரதமராக இருக்கும் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் விளக்க வேண்டும் என்று பக்கத்தான் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் உடனடியாக விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நேற்றிரவு வெளியிட்ட கூட்டறிக்கையில் அம்மன்றம் வலியுறுத்தியது.

கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசாங்கத் தலைவர்களைக் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய ஆடவரை தாங்கள் கைது செய்துள்ளதாக புக்கிட் அமான் பயங்கரவாத தடுப்பு (இ8) சிறப்பு பிரிவின் துணை இயக்குநர் அஸ்மான் ஓமாரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

 


Pengarang :