NATIONALPBTSELANGOR

ஷா ஆலமில் ‘இசை நீரூற்று‘- சுற்றுப்பயணிகளை ஈரக்கும் புதிய மையம்

 ஆலம், மார்ச் 29- இங்குள்ள தாசேக் ஷா ஆலமில் 40 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடிய ‘இசை நீரூற்று‘ உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட இந்த நீரூற்று மாநகரின் புதிய சுற்றுலா மையமாக உருவெடுத்துள்ளது.

இசைக்கேற்ப நீரூற்று அசைந்தாடும் வகையில் ஒலி மற்றும் ஒளியமைப்பு  (எல்.இ.டி) வசதிகள் இந்த நீரூற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஷா ஆலம் இடைக்கால டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் கூறினார்.

இந்த இசை நீரூற்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை தினங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இசை நீரூற்று மற்றும் தொங்கு பாதையின் திறப்பு விழாவில் உரையாற்றிய  போது அவர் இவ்வாறு தெரிவித்தார். சிலாங்கூர் மாநில ராஜா மூடா துங்கு அமிர் ஷா இந்த சுற்றுலா ஈர்ப்பு மையங்களை திறந்து வைத்தார். மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாயும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

சுமார் 19 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி செலவில் இந்த இசை நீரூற்று உருவாக்கப்பட்டதாக முகமது ரஷிடி கூறினார். ஷா ஆலம் நகருக்கு சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :