PBTSELANGOR

சிறு வியாபாரிகளுக்கு வர்த்தக லைசென்ஸ் வழங்கும் முறையை ஊராட்சி மன்றங்கள் எளிதாக்கும்

ஷா ஆலம், மார்ச் 31– கோவிட்-19 பெருந்தொற்றினால் வருமானம்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வழங்கும் நடைமுறையை சிலாங்கூரிலுள்ள ஊராட்சி மன்றங்கள் எளிதாக்கவுள்ளன.

ஒவ்வொரு பகுதியிலும் வர்த்தக நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக பொருத்தமான வணிக இடங்களை அடையாளம் காணும் பணியும் மேற்கொள்ளப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

போக்குரத்து நெரிசலுக்கு காரணமான மற்றும் வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய வணிக பகுதிகள் பாதுகாப்பான  இடங்களுக்கு மாற்றப்படும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொன்றினால் அதிகம் பாதிக்கப்பட்டத் தரப்பினராக சிறு வியாபாரிகள் கருதப்படுவதால் அவர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நோய்த் தொற்று காரணமாக அவர்களில் பலர் வருமானத்தை இழந்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வர்த்தக லைசென்ஸ் கட்டண விலக்களிப்பு உள்பட பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்குகிறது என்றார் அவர்.

கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு உதவு வகையில் தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வழங்கும் நடைமுறையை எளிதாக்கும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஊராட்சி மன்றங்களை வலியுறுத்தியிருந்தார்.


Pengarang :