ECONOMYPBTSELANGOR

உணவு உதவித் திட்டத்திற்கு பதிந்து கொள்வீர்- டாக்சி, பஸ் ஓட்டுநர்களுக்கு  வேண்டுகோள்

சிப்பாங், ஏப் 7-பொருளாதார சுமையைக் குறைப்பதற்கு ஏதுவாக உணவு உதவித் திட்டத்தில் மேலும் அதிகமான டாக்சி மற்றும் பள்ளி பஸ் ஒட்டுநர்கள் பங்கேற்பதை சிலாங்கூர் மாநில அரசு ஊக்குவிக்கிறது. 

இந்த உணவு உதவித் திட்டத்தில் பங்கேற்பதற்கு இதுவரை 7,919 பேர் பதிவு செய்துள்ளதாக நகர்ப்புற நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

பத்து லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் வாயிலாக டாக்சி மற்றும் பள்ளி பஸ் ஓட்டுநர்களுக்கு கட்டங் கட்டமாக உதவி வழங்கப்படும் என அவர் சொன்னார்.

இத்திட்டத்தின் வாயிலாக பத்தாயிரம் பேர் பயன்பெறும் வகையில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதுவரை 7,919 பேர் மட்டுமே இதற்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே, இதில் விடுபட்டவர்கள் ஊராட்சி மன்றங்கள் வாயிலாக தங்களைப் பதிந்து கொள்வர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இங்கு நடைபெற்ற சிப்பாங் நகராண்மைக்கழக அளவிலான டாக்சி மற்றும் பள்ளி பஸ் ஓட்டுநர்களுக்கு உணவு உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிப்பாங் மாவட்டத்தைச் சேர்ந்த 131 பேர் உணவு உதவிப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் வகையில் 43 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி  நிதி ஒதுக்கீட்டில் உணவு உதவித் திட்டம் அமல்படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி அறிவித்திருந்தார்.

டாக்சி மற்றும் பள்ளி பஸ் ஓட்டுநர்கள், முன்களப் பணியாளர்கள், பிபிஆர் வீடுகளில் வசிப்போர், கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் திடக்கழிவு அகற்றும் நிறுவன லோரி ஓட்டுநர்கள்  பயன்பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.


Pengarang :