ECONOMYPBTSELANGORSUKANKINI

விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப் 11– தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படி விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும் அமலாக்க அதிகாரிகளுக்குமிடையே பதற்றமான சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாவதாக இளம் தலைமுறையினர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். அபராதம் விதிக்கப்படுவதை தவிர்க்க விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பர் என நான் எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

அதே சமயம், விதிமுறை மீறல் நிகழும் பட்சத்தில் அமலாக்க அதிகாரிகளும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் அமைதியான முறையில் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிப்பாங் அனைத்துலக கார் பந்தயத்  தடத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறியதற்காக அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு கூறினார்.

அந்த பந்தயத்தை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெற்றிருந்த போதிலும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கத் தவறி விட்டதாக கூறப்படுகிறது.


Pengarang :