ECONOMYNATIONAL

நோன்பு மாதத்தில் அதிகாலை 6.00 மணி வரை செயல்பட உணவங்களுக்கு அனுமதி

கோலாலம்பூர், ஏப் 13– நோன்பு மாதத்தின் போது நிபந்தனையுடன்  கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை   அமலில் உள்ள மாநிலங்களில் உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள், துரித உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு விநியோகச் சேவைகள் விடியற்காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

நோன்பை கடைபிடிப்பவர்கள் குறிப்பாக தனியாக  வசிப்பவர்கள் அதிகாலையில் உணவை வாங்குவதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

எனினும், பேரங்காடிகளில் உள்ள உணவகங்கள் சம்பந்தப்பட்ட விற்பனை மையங்களின் விற்பனை நேரத்தை பொறுத்தே கடைகளைத் திறக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

நோன்பு மாதத்தில் உணவு வாங்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமிருந்து குறிப்பாக  தனியாக  வசிப்பவர்களிடமிருந்து தாங்கள் பல கோரிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊராட்சி மன்றங்கள் நிர்ணயித்துள்ள நேர அளவுக்கேற்ப  நள்ளிரவு வரை மட்டுமே செயல்பட உணவங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் சொன்னார்.

நோன்பு தொடங்குவதற்கு முன்னர் வாடிக்கையாளர்கள் உணவை வாங்கிச் செல்வதற்கு அல்லது கடையில் அமர்ந்து  உண்பதற்கு ஏதுவாக விடியற்காலை வரை உணவங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளோம் என்றும் அவ தெரிவித்தார்.

நோன்பு துறப்பு நிகழ்வை நடத்துவதற்கு ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு கடுமையான எஸ்.ஒ.பி. நிபந்தனைகளடன் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :