ECONOMYSELANGORYB ACTIVITIES

பிரிக்பீல்ட்சில் இரு இந்திய பிரஜைகள் கடத்தல்- சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

கோலாலம்பூர், ஏப் 14– பிரிக்பீல்ட்சில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து இந்திய பிரஜைகளான இரு ஊழியர்களை கடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடத்தப்பட்ட அவ்விரு நபர்களும் முன்பு, பண்டமாரானிலுள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தவர்கள் எனக் கூறப்படுவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் ஓமார் கூறினார்.

நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தாக கூறிய அவர், அந்த உணவகத்தில் நுழைந்த சில ஆடவர்கள் அவ்விரு தொழிலாளர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகச் சொன்னார்.

முன்பு கிள்ளானிலுள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த அந்த ஊழியர்கள் முதலாளி சம்பளம் வழங்கத் தவறியதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி வந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடத்தப்பட்டவர்களில் ஒருவர் தனது முதலாளிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை கிள்ளானில் போலீஸ் புகார் செய்துள்ளதோடு பிரிக்பீல்ட்சில் உள்ள அந்த உணவகத்தில் அடைக்கலம் நாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கடத்தல் சம்பவம் தொடர்பில் போலீசார் குற்றவியல் சட்டத்தின் 363வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இந்திய பிரஜைகளை சில நபர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய 29 விநாடி  காணொளி நேற்று சமூக ஊடங்களில் பகிரப்பட்டது.


Pengarang :