ECONOMYNATIONALPBTSELANGOR

73.9 % முதலாளிகள் தொழிலாளர் தங்குமிட வசதி சட்டத்தை பின்பற்றவில்லை

அலோர்ஸ்டார்- ஏப், 18- நாட்டிலுள்ள 73.9 விழுக்காட்டு தொழிலாளர்கள் அதாவது 10,961 பேர் 1990ஆம் ஆண்டு (சட்டம் 446) தொழிலாளர் தங்குமிட மற்றும் அடிப்படை வசதிக்கான குறைந்த பட்ச நிர்ணய சட்டத்தை பின்பற்றவில்லை.

இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை மனித வள இலாகா நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனையில் இந்த விஷயம் கண்டறியப்பட்டதாக துணை மனிதவள அமைச்சர் டத்தோ அவாங் ஹிஷிம் கூறினார்.

நாடு முழுவதும் 14,835 முதலாளிகளை உள்ளடக்கிய 95,870 தங்குமிடங்கள் மீது இச்சோதனையை மனித வள இலாகா மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அச்சோதனையில்  3,874 முதலாளிகள் அதாவது 26.1 விழுக்காட்டினர் தொழிலாளர் தங்குமிட வசதி தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளனர். மற்றவர்கள் முறையான தங்குமிட வசதியை தங்கள் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி தரவில்லை என்றார் அவர்.

இது தவிர, 572,518 அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் 43,698 உள்நாட்டுத்  தொழிலாளர்கள் மீதும் இக்காலக்கட்டத்தில் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 இச்சோதனையின் போது தொழிலாளர்களுக்கு முறையான தங்குமிட வசதியை ஏற்படுத்தித் தராதது, ஊராட்சி மன்ற விதிகளை பின்பற்றாதது, தங்குமிடங்களில் ஓய்வு அறை மற்றும் உணவு கூடம் ஏற்படுத்தித் தராதது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் 625 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :