ECONOMYHEALTHSELANGOR

தடுப்பூசியை சொந்தமாக பெறும் சிலாங்கூரின் முயற்சியில் தாமதம்

ஷா ஆலம், மே 6– சிலாங்கூர் மக்களுக்காக சொந்தமாக கோவிட்-19 தடுப்பூசியை வாங்கும்  மாநில அரசின் திட்டம் தாமதமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த தடுப்பூசிகளை மத்திய அரசு முழுமையாக பெறாத நிலையில்  மாநில அரசு அதனைப் பெறுவது சாத்தியமாகாது என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

தடுப்பூசியை முழுமையாக விநியோகிக்க முடியாத நிலையில் அதன் உற்பத்தியாளர்கள் உள்ள காரணத்தால் அந்த தடுப்பூசியைப் பெறுவதற்கு மாநில அரசு மேற்கொண்ட முயற்சியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

தடுப்பூசி உற்பத்தியாளர்களால் மத்திய அரசுக்கே முழுமையாக மருந்துகளை விநியோகிக்க முடியவில்லை. இந்நிலையில் சிலாங்கூர் அரசு அதனைப் பெறுவது என்பது சாத்திமற்றதாக உள்ளது. எந்த விஷயமும் இங்கு வெளிப்படையாக நடக்கவில்லை என்று அவர் மலேசியா கினி இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக கோவிட்-19 தடுப்பூசியை சிலாங்கூர் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக  சித்தி மரியா கடந்த திங்களன்று கூறியிருந்தார்.

மாநில  மக்களுக்காக முப்பது லட்சம் முதல் ஐம்பது லட்சம்  வரையிலான தடுப்பூசிகளை சிலாங்கூர் மாநிலம் வாங்கும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

இந்நோக்கத்திற்காக மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தது.


Pengarang :