ECONOMYPBTSELANGOR

நான்கு தொகுதிகளில் நடந்த இலவச பரிசோதனையில் 227 பேருக்கு நோய்த் தொற்று கண்டு பிடிப்பு

ஷா ஆலம், மே 10– சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில்  கடந்த இரு தினங்களாக நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனையின் மூலம் 227 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

பலாக்கோங், செமினி, காஜாங், சுங்கை ராமால் ஆகிய தொகுதிகளில் 4,429  பேரிடம் நடத்தப்பட்ட சோதனையின் வழி நோய்த் தொற்று உள்ள அந்த 227 பேரும் அடையாளம் காணப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பை துண்டிப்பதற்கும் பொதுமக்களை அந்த கொடிய நோயிலிருந்து காப்பாற்றுவதற்கும் ஏதுவாக இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தொடர்ந்து நடத்தப்படும்  என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்குரிய ஏற்பாட்டை செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தினசரி இரு சட்டமன்றத் தொகுதிகள் வீதம் அனைத்து 56 தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை சிலாங்கூர் அரசு மேற்கொள்ளவுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த சனியன்று காஜாங் மற்றும் செமினி ஆகிய தொகுதிகளில் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்ட வேளையில் நேற்று பலாக்கோங் மற்றும் சுங்கை ராமால் ஆகிய தொகுதிகளில் இச்சோதனை நடைபெற்றது.


Pengarang :