ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சுகாதார கிளினிக்குகளை தடுப்பூசி மையங்களாக மாற்ற சிலாங்கூர் பரிந்துரை

ஷா ஆலம், மே 25– சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுகாதார கிளினிக்குகளை கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் மையங்களாக மாற்றுவதற்கான சாத்தியத்தை மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அந்த தடுப்பூசியைச் செலுத்தும் மையமாக சுகாதார கிளினிக்குகளை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙடிமான் கூறினார்.

இந்த பரிந்துரையை நாங்கள் சுகாதார அமைச்சிடம் முன்வைத்துள்ளோம். அவர்களும் இதற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள ஐ.சி.சி.சி. மையத்தில் உள்ள ஆஸ்டராஸேனேகா தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தவிர, நடமாட முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ‘அவுட்ரிச்‘ எனும் திட்டத்தை தமது துறை அமல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆஸ்ட்ராஸேனேகா தடுப்பூசித் திட்டம் குறித்து பேசிய அவர், ஐ.டி.சி.சி. மையத்திற்கு 42,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தினசரி மூவாயிரம் தடுப்பூசிகள் வீதம் வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை அத்தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :