MEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளானில் ஆயுதமேந்தி கொள்ளை- ஐந்து நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

கிள்ளான், ஜூன் 15– கிள்ளானில் உள்ள அலுவலகம் ஒன்றில் ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட  ஐந்து ஆடவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த 12ஆம் தேதி விடியற்காலை 3.00 மணியளவில் நிகழ்ந்ததாக கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி  சம்சுல் அமார் ரம்லி கூறினார்.

அந்த அலுவலத்தில் திடீரென முற்றுகையிட்ட எட்டு ஆசாமிகள் அங்கிருந்த உதவியாளரை இரும்புக் கம்பி, சங்கிலி மற்றும் நாற்காலியைக் கொண்டு தாக்கியதாக அவர் சொன்னார்.

அந்த உதவியாளருக்குச் சொந்தமான இரு தங்கச் சங்கிலிகள்,  மற்றும் ஏ.டி.எம் பணப் பட்டுவாடா அட்டையை அக்கும்பல் பறித்துக் கொண்டது. பின்னர் அந்த அட்டையைப் பயன்படுத்தி  கணிசமான தொகையை வங்கியிலிருந்து  மீட்டுக் கொண்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது என்று அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் துரித நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்  மூன்று  நபர்களை அன்றைய தினம் இரவு 10.50 மணியளவில் கிள்ளான் வட்டாரத்தில்  கைது செய்தனர் என்றார் அவர்.

கைதான இரு நபர்கள் தலா ஆறு குற்றப்பதிவுகளை கொண்டிருப்பது  தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அம்மூவரும் விசாரணைக்காக கடந்த 13ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதான நபர்களிடமிருந்து இரும்புக் கம்பி, கண்காணிப்பு கேமரா பதிவுக் கருவி, கைத்தொலைபேசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.


Pengarang :