ECONOMYHEALTHNATIONALPBT

சிலாங்கூரில் ஒருமைப்பாட்டை வளர்க்க பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 4– சிலாங்கூரில் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள  மாநில அரசு பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எம்.பி.ஐ.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க மன்றத்தின் உருவாக்கத்திற்காக விஷேசமாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

ஒற்றுமைத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஒருமைப்பாடு மீதான மாநில அரசின் கொள்கைகளை வகுக்க க்கூடிய சிந்தனை அமைப்பாக எம்.பி.ஐ.எஸ். விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகள் மாநில பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். பொருளாதார ரீதியிலான வளர்ச்சியில் மட்டுமின்றி சுபிட்சம் மற்றும் உயரிய சமூக நெறியிலும் வெற்றி கண்ட மாநிலத்திற்கான எடுத்துக்காட்டாகவும் விளங்கும் என்றார் அவர்.

இயங்கலை வாயிலாக இந்த எம்.பி.ஐ.எஸ். திட்டத்தை தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சுமார் 35.4 லட்சம் மலாய்க்காரர்கள், 15 லட்சம் சீனர்கள், 757,000 இந்தியர்கள் மற்றும் 52,000 இதர இனத்தினரின் வசிப்பிடமாக விளங்குவதன் மூலம் தனித்துவமிக்க மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதாகவும் அவர் கூறினார்.

பல்லினை மக்கள் கொண்ட மாநிலம் என்ற இந்த சிறப்பம்சமே சில வேளைகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :