ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நாட்டில் நிலைமை சீராவதற்கு பல மாதங்கள் பிடிக்கும்- மந்திரி புசார் கூறுகிறார்

ஷா ஆலம், ஜூலை 5- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு சீராவதற்கு  பல மாதங்கள் பிடிக்கும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டில் பதிவாகும் தினசரி கோவிட்-19 சம்பவங்களின் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுவதாக சினார் ஹரியான் மலாய் தினசரிக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக போதுமான அளவு கட்டில்கள் மற்றும் மருத்துவ வசதிகளை மருத்துவத் துறையினர் ஏற்படுத்தும் நோக்கில் மாநிலத்தில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நோயாளிகளை கண்டறிவது, சோதிப்பது, நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் காண்பது, தனிமைப் படுத்துவது ஆகியவை நோய்த் தொற்றை கட்டுப் படுத்துவதற்கான சிறந்த அணுகுமுறையாக உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

ஆகவே, பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்குப் பின்னர் சிறந்த ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த இந்த அணுகுமுறையை அமல்படுத்துவது அவசியம் என்றார் அவர்.

தற்போது, கோவிட்-19 நோய்த் தொற்றின் மையப்புள்ளியாக சிலாங்கூர் விளங்குகிறது. மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது எனக்கு மிகுந்த கவலையைத் தருகிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக மக்கள் தொகையை அதாவது 65. மில்லியன் பேரைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. வெளிமாநிலங்களிலிருந்து இங்கு வந்து வேலை செய்வோர் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றார் அவர்.

சிலாங்கூரை மையமாக கொண்ட பொருளாதார நடவடிக்கைகளும் அதிக மக்கள் தொகையும் இம்மாநிலத்தில் அதிக கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :