ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தொழிற்சாலைகளை மூடும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு- ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

ஷா ஆலம், ஜூலை 14- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமலாக்க காலத்தில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தொழில்துறைகள் சார்ந்த நடவடிக்கைகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் (எஸ்.ஒ.பி.) அமலாக்கம் உள்பட அனைத்து கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் 1988ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்திற்கு (சட்டம் 342) உட்பட்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளின் உரிமையை மீட்டுக் கொள்வதற்கு அல்லது ரத்து செய்வதற்கான அதிகாரம் இக்காலக்கட்டத்தில் ஊராட்சி மன்றங்களுக்கு கிடையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு கோவிட்-19 நோய்த் தொடர்பான கொள்கைகள் அல்லது நடவடிக்கைகளை அமல் செய்ய மாநில அரசு தயாராக உள்ளது என்றும் அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கு நோக்கில் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது 342வது சட்ட வரம்பிற்கு அல்லது தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள எஸ்.ஒ.பி. விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும் என்று மாநில சட்ட ஆலோசகர் கூறியுள்ளார்.

மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகள் மீது விருப்பம் போல் நடவடிக்கை எடுப்பதற்கோ அனுமதியை ரத்து செய்வதற்கோ ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது என்பது இதன் பொருளாகும் இங் குறிப்பிட்டார்.


Pengarang :