ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஆகஸ்டு மாதம் நோய்த் தொற்று குறையும்- அமைச்சர் கைரி நம்பிக்கை

ஷா ஆலம், ஜூலை 26– கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் அந்நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அடுத்த மாதம் குறையும் என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

வரும் ஆகஸ்டு மாதவாக்கில் நாட்டிலுள்ள பெரியவர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் தடுப்பூசியை பெற்றிருப்பதற்கான சாத்தியம் உள்ளதன் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடுமையான விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இந்நோய் காரணமாக மூத்த குடிமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தற்போது குறைந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்ட அமலாக்கத்திற்கேற்ப மருதுவமனையில் அனுமதிக்கப்படும் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலையில் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை சுங்கை பூலோ மருத்துவமனையின் தரவுகள் காட்டுகின்றன என்றும் அவர் சொன்னார்.

சார்ஸ் கோவி-2 வைரஸை மனிதர்கள் எதிர்கொள்வதில் கோவிட்-19 தடுப்பூசி சக்திவாய்ந்த கவசமாக விளங்குகிறது என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி பெறுவதற்கு அதிகமானோர் பதிவு செய்வதானது தடுப்பூசியின் செயல்திறன்  மீது பலருக்கு இந்த அவநம்பிக்கை அகலத் தொடங்கியதை காட்டுவதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வேறு வகையான கோவிட்-19 தடுப்பு மருந்துகளை எடுக்க விரும்பிய காரணத்தால் தடுப்பூசியைப் பெறுவதை பலர் தவிர்க்க முயன்றனர். எனினும், இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்களுக்கு பல தளர்வுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்குப் பின்னர் பலர் தடுப்பூசியை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

 


Pengarang :