HEALTHMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம்- பண்டான் இண்டா தொகுதியில் 2,000 பேர் பதிவு

அம்பாங், ஜூலை 28- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டதின் கீழ் தடுப்பூசி பெறுவதற்கு பண்டான் இண்டா தொகுதியில் சுமார் 2,000 பேர் பதிவு செய்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில அரசினால் இத்தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,600 தடுப்பூசி கோட்டாவை நிறைவு செய்வதற்காக மேலும் அதிகமானோரை இத்திட்டத்தில் பதிவு செய்யும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இத்தொகுதியில் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் அடுத்த மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இத்திட்டத்தின் வாயிலாக இங்குள்ள பொதுமக்கள் தடுப்பூசி பெறுவதற்கு ஏதுவாக தடுப்பூசி பதிவு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதில் உதவி புரியும்படி அம்பாங் ஜெயா நகாண்மைக்கழகம் மற்றும் கிராமத் தலைவர்களை தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட மெர்பாத்தி அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை விநியோகம் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் சிலாங்கூர் அரசு தொழில் துறையினர் மற்றும் பொதுமக்களுக்காக இரு தடுப்பூசித் திட்டங்களை  அறிவித்தது.

இத்திட்டத்தின் வழி தொழில்துறையினருக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட வேளையில் பொதுமக்களுக்காக 5 லட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டன.


Pengarang :