ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மாற்றுத் திறனாளிகளுக்கு வெ. 500 உதவித் தொகை- 7,300 பேர் விண்ணப்பம்

ஷா ஆலம், ஆக 2- மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு உதவித் தொகையாக 500 வெள்ளி வழங்கும் திட்டத்திற்கு கடந்த சனிக்கிழமை வரை 7,300 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் 100 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் உதவித் தொகை வழங்கப்பட்டதாக யாவாஸ் அறவாரியத்தின் தலைமை நிர்வாகி கான் பெய் நீ கூறினார்.

இதர விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் அவற்றில் சில சம்பந்தப்பட்டத் தரப்பினரின் சான்றுக் கடிதங்களைக் கொண்டிராதது உள்பட நிபந்தனைகளை முறையாக பூர்த்தி செய்யாமலிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இதனைத் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் ஆவணங்களை முழுமையாக அனுப்புவதற்கு ஏதுவாக விண்ணப்ப நாள் ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சாத்தியத்தை பரிசீலிக்கும்படி தாம் மாநில அரசைக் கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் வாயிலாக 1,200 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால், கிடைத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஊக்கமூட்டும் வகையில் உள்ளது. கோவிட்-19 பெருதொற்று தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக விண்ணப்பம் செய்துள்ளனர் என அவர் மேலும் சொன்னார்.

கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்த கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பில்  மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த உதவித் திட்டம் இடம் பெற்றுள்ளது. 

சுமார் 1,200 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக தலா 500 வெள்ளி வழங்க வகை செய்யும் இத்திட்டத்திற்காக மாநில அரசு 6 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


Pengarang :