ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பண்டான் இண்டா தொகுதி ஏற்பாட்டில் 1,600 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்

ஷா ஆலம், ஆக 3– ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பற்றுச் சீட்டுகள் வழங்குவதற்காக பண்டான் இண்டா தொகுதி 160,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பற்றுச் சீட்டுகள் இம்மாத மத்தியில் விநியோகம் செய்யப்படும்.

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட 1,600 பேர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் தேர்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 100 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும். இந்த தொகையைக் கொண்டு அவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார் அவர்.

பெருந்தொற்றினால் கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இக்காலக்கட்டத்தில்  இந்த உதவி அவர்களின் சுமையை ஓரளவு குறைக்க துணை புரியும் என்று அவர் நம்பிக்கைத்த் தெரிவித்தார்.

இந்த பற்றுச் சீட்டுகளை சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் நேரடியாக சென்று ஒப்படைப்பதா? அல்லது எஸ்.ஒ.பி. விதிமுறைகளைப் பின்பற்றி தொகுதி சேவையை மையத்தில் வழங்குவதா? என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

மூத்த குடிமக்களுக்கான ஜோம் ஷோப்பிங் திட்டத்தை அமல்படுத்துவதற்காக சிலாங்கூர் அரசு 2 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :