Suruhanjaya Pencegahan Rasuah Malaysia.
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மொகிடினை ஆதரிக்க லஞ்சமா? எம்.ஏ.சி.சி. விசாரிக்க வேண்டும்- பக்கத்தான் கோரிக்கை

கோலாலம்பூர், ஆக 9- பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசினை ஆதரிக்க லஞ்சம் தர முன்வரும் தரப்பினரை மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விசாரிக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இது போன்ற ஊழல் பேர சம்பவங்கள் இதற்கு முன்னரும் நிகழ்ந்துள்ளதால் இத்தகைய செயல்களுக்கு எதிராக ஊழல் தடுப்பூ ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கூட்டணியின் தலைவர் மன்றம் வலியுறுத்தியது.

பிரதமர் மொகிடின் பெரும்பான்மை ஆதரவை இழந்து விட்டார் என்பதோடு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 43(4) பிரிவுக்கேற்ப பதவி விலக அவர் மறுத்து வருகிறார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை மொகிடின் பக்கம் இழுக்க முயலும் சில தரப்பினரின் செயல் சட்டத்திற்கு புறம்பானது. அதோடு மட்டுமின்றி இந்நடவடிக்கையின் வாயிலாக பெரும்பான்மை இல்லாத மொகிடின் தொடர்ந்து பதவியில் நீடிக்கவும் மக்கள் தொடர்ந்து துன்பத்தில் தவிக்கவும் கூடிய சூழல் உருவாகும் என்று அக்கூட்டணி வெளியிட்ட அறிக்கை கூறியது.

இந்த அறிக்கையில் பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,  அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இவ்விவகாரத்தில் எம்.ஏ.சி.சி. நடவடிக்கை எடுக்கத் தவறினால் அந்த ஊழல் தடுப்பு அமைப்பு சட்டத்தை நிலைநாட்டுவதற்கு பதிலாக அரசியல் நோக்கத்திற்கான  ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றசாட்டு நிரூபணமாகிவிடும் என்றும் அந்த கூட்டணி தெரிவித்தது

பிரதமர் மொகிடின் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாகவும் அது குறிப்பிட்டது.


Pengarang :