ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பார்ப்பதற்கு முரடர்களைக்போன்று இருப்பார்கள், ஊசியைக் கண்டால் பயந்து நடுங்குவார்கள்- மருத்துவரின் அனுபவம்

ஷா ஆலம், ஆக 12- முரடான தோற்றத்தைக் கொண்டிருப்பவர்கள் கூட ஊசியைக் கண்டு அஞ்சுவதாக கோவிட்-19 நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் கூறினார்.

ஒரு சிலர் பார்ப்பதற்கு பயங்கரமாக இருப்பார்கள். உடம்பெல்லாம் பச்சைக் குத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஊசியைக் கண்டவுடன் அஞ்சி நடுங்குவார்கள். அவர்களை சிறிது நேரத்திற்கு சமாதானப் படுத்தியப் பின்னரே தடுப்பூச செலுத்த முடியும் என்று டாக்டர் அரிஃபுடின் மாமாம் என்ற அந்த மருத்துவர் தெரிவித்தார்.

ஆண், பெண் இருபாலருக்குமே ஊசியைக் கண்டு பயப்படும் மனப்போக்கு உள்ளதாக கூறிய அவர், தடுப்பூசியை செலுத்துவதற்கு முன்னர் சில நிமிடங்கள் அவர்களை தேற்றி தைரியத்தை கொடுத்து தயார் படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

தடுப்பூசி பெறும் போது ஏற்படும் வலியைக்  குறைக்க பல்வேறு யுக்திகளைக் கையாள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

தடுப்பூசி செலுத்தும் போது ஏற்படும் வலி கடுமையாகவும் நீண்ட காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்காது என்பதால் அது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு சிலர் வலியைப் போக்குவதற்காக தைலத்தை தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் தடவுவர். பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் ஏன் எரிச்சல் ஏற்படுகிறது என்று கேள்வியெழுப்புவர் என்றார் அவர்.

தடுப்பூசித் திட்டம் தொடங்கியது முதல் சுமார் 2,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ள டாக்டர் அரிஃபுடின் தனது அனுபவங்களை சிலாங்கூர் கினியிடம் பகிர்ந்து கொண்டார்.

சிறிது நேரமே நீடிக்கக்கூடிய லேசான வலிக்கு அஞ்சி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத வலி நிவாரண முறைகளை பின்பற்ற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஊசி என்றவுடன் அச்ச உணர்வு ஏற்படுவது இயல்புதான். எனினும் ஊசி செலுத்தப்படும் போது நிதானத்துடனும் மருத்துவர் கூறும் ஆலோசனைக்கேற்பவும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :