Wong Siew Ki mengedarkan Kit Lawan Covid-19 kepada penduduk di sekitar Balakong bagi membendung penularan Covid-19 pada 19 April 2020. Foto ihsan Facebook Wong Siew Ki
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

பி40 பிரிவு இளைஞர்களின் வருமானத்தை அதிகரிக்க சிறப்பு பொருளாதாரப் பிரிவு உருவாக்கம்

ஷா ஆலம், ஆக 26- கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இளைஞர்கள் குறிப்பாக பி40 பிரிவினர் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக இளைஞர் பொருளாதாரப் பிரிவு உருவாக்கப்படுகிறது.

மாநில அரசின் திட்டங்கள் வாயிலாக வர்த்தக மற்றும் விவசாய நடவடிக்கைகளில் பங்கேற்போரை அணுகக்கூடிய தளமாக இந்த பிரிவு விளங்கும் என்று இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

நீண்ட கால அடிப்படையில் பலன் தரக்கூடிய வகையில் மாநில அரசு வழங்கக்கூடிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் திட்டங்களுக்கு இளைஞர்கள் விண்ணப்பம் செய்வதை எளிதாக்கும் நோக்கில் இலக்கவியல் தளம் ஒன்று உருவாக்கப்படும் என்று சொன்னார்.

இது தவிர குறுகிய கால அடிப்படையில் பயன்தரும் வகையில் உணவுக் கூடைத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளோம். குறைந்த வருமானம் பெறுவோர் பயன்பெறுவதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்திற்கு கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் வாயிலாக 32 லட்சத்து 80 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று பலாக்கோங் உறுப்பினர் வோங் சீயு கீ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்ட இளையோருக்கு மாநில அரசு எத்தகைய உதவிகளை வழங்கும் என அவர்  கேள்வியெழுப்பியிருந்தார்.

இதனிடையே, வருமானம் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவும் வகையில் தன்னார்வலர் திட்டத்தை மாநில அரசு மேலும் வலுப்படுத்தும் என்றத் தகவலையும் கைருடின் அவையில் வெளியிட்டார்.

இந்நோக்கத்தின் அடிப்படையில் 36 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் தன்னார்வலர் அமைப்பை உருவாக்கவிருக்கிறோம். செர்வ் எனப்படும் இந்த தன்னார்வலர் அமைப்பில் பங்கேற்போருக்கு அலவன்சாக சிறிய தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :