ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

நீர் தூய்மைக்கேடு- பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் நீர் விநியோகம்   

ஷா ஆலம், செப் 1– சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்பட்ட காரணத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட நீரை விநியோகம் செய்யும் நடவடிக்கை இன்று காலை 7.00 மணி தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.

நீரின் தரம் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள அளவுக்கேற்ப உள்ளதை தேசிய நீர் சேவை ஆணையம் உறுதி செய்ததைத் தொடர்ந்து நீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

நீர் மாசுபாடு காரணமாக மூடப்பட்ட சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மறுபடியும் செயல்படத் தொடங்கியுள்ளது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீரை பயனீட்டாளர்களுக்கு விநியோகிக்கும் பணி இன்று காலை 7.00 முதல் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கை கூறியது.

பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்குள் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என்றும் அது தெரிவித்தது.

ஜெண்டேராம் ஹிலிர் சுத்திகரிக்கப்படாத நீர் அழுத்த நிலையத்தில் நீரில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கின் 463 இடங்களில் நேற்று தொடங்கி அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.

இதனால் பெட்டாலிங் மாவட்டத்தில் 172 இடங்களும் உலு லங்காட் மாவட்டத்தில் 54 இடங்களும் சிப்பாங்கில் 194 இடங்களும் புத்ரா ஜெயாவில் 23 இடங்களும் கோல லங்காட்டில் 20 இடங்களும் நீர் விநியாகத் தடையினால் பாதிக்கப்பட்டன.

 

நீர் விநியோகம் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் www.airselangor.com என்ற அகப்பக்கம் வாயிலாகவும் ஆயர் சிலாங்கூர் செயலி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

 


Pengarang :