ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

டி பல்மா ஹோட்டல் தடுப்பூசி மையத்தில் 9,500 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி

ஷா ஆலம், செப் 1- இங்குள்ள டி பல்மா ஹோட்டலில் செயல்படும் தடுப்பூசி மையத்தில் நேற்று வரை சிலாங்கூரைச் சேர்ந்த 9,500 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் இம்மையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதாக அம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் அகமது அப்பாண்டி ஆடாம் கூறினார்.

கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் இங்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை நாங்கள மேற்கொண்டு வருகிறோம். வரும் செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் எஞ்சியுள்ள 3,500 தடுப்பூசிகளையும் முடித்தாக வேண்டும் என்றார் அவர்.

இந்த தடுப்பூசித் திட்டத்திற்கு பொதுமக்கள் வழங்கி வரும் ஆதரவு வரவேற்கத்தக்க வகையில் உள்ளதாக கூறிய அவர், வருகைக்கான முன்பதிவு கிடைக்கப்பெற்றவர்கள் குறிப்பிட்ட தினத்தில் தவறாமல் வந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என தாங்கள் எதிர்பார்ப்பதாக சொன்னார்.

குறிப்பிட்ட தேதியில் தடுப்பூசி  மையத்திற்கு வரத் தவறியவர்கள் செல்கேர் கிளினிக்கிற்கு சென்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம். எனினும், சம்பந்தப்பட்ட தினத்தில் வரத்தவறியதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்திற்காக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இந்த விஷயத்தில் விலக்களிக்கப்படும். எனினும், அதற்கு ஆதாரமாக அவர்கள் சுகாதார அமைச்சின் சான்று கடிதங்களை சமர்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :