ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் நிலத் தகுதி மாற்றம் ரத்து- ஆட்சிக்குழு முடிவு

ஷா ஆலம், நவ 8– கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அதன் நிலத் தகுதியை மாற்றம் செய்யும் முடிவை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு இன்று ரத்து செய்தது. 

எனினும், அங்குள்ள கம்போங் பூசுட் பாரு பூர்வக்குடியினர் நிலப்பகுதியை தகுதி மாற்றம் செய்யும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மொத்தம் உள்ள 1,326 ஏக்கரில் 104 ஏக்கர் பகுதியில் மட்டும் நிலத் தகுதி மாற்றம் தொடர்ந்து அமலில் இருக்கும். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் அமைக்கும் போது இட மாற்றம் செய்யப்பட்ட பூர்வக்குடியினருக்கான நிலபிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

மேலும், கிழக்கு கரை ரயில் திட்டத்திற்காக (இ.சி.ஆர்.எல்.) அந்த வனத்தின் சிறிய பகுதியை தகுதி மாற்றம் செய்தது தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் சொன்னார்.

இந்த நிலப்பகுதியை தகுதி மாற்றம் செய்வததற்கு மாற்றாக சுங்கை பஞ்சாங், புக்கிட் புரோகா, அம்பங் பெச்சா ஆகிய பகுதிகளில் ஆர்ஜிதம் செய்யப்பட்ட   1,436 ஏக்கர் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வனப்பகுதியில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த மேம்பாட்டுப் பணிகளை மாநில அரசு ரத்து செய்துள்ளதோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில உரிமையும் ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மொத்த நிலப்பரப்பான 991.90 ஹெக்டர் பகுதியில் சுமார் 45 விழுக்காடு அதாவது 536.70 ஹெக்டர் பகுதியை மேம்பாட்டுப் பணிகளுக்காக நிலத் தகுதி மாற்றம் செய்ய  1985 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில நிலச்சட்டத்தின்  12 வது பிரிவின் கீழ் மாநில ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்திருந்தது.

 


Pengarang :